கடும் அழுத்தங்களை பொருட்படுத்தாமல் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட சிலரை 90 நாட்கள் தடுத்து வைக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டுள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் சங்கைக்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 15 பேர் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தால் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர். சந்தேகநபர் ஒருவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும், கல்வெவ சிறிதம்ம தேரர், ஹஷந்த ஜீவந்த குணதிலக மற்றும் வசந்த முதலிகே ஆகியோர் பிணையில் விடுவிக்கப்படவில்லை. மாறாக 72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், தடுப்பு காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜனாதிபதி அவ்வாறு கையெழுத்திடுவது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் என்றும் அவர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.