சோமாலியாவில் உள்ள ஹோட்டலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில், 21 பேர் கொல்லப்பட்டதாகவும், 117 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க நாடான சோமாலியாவின் மொகதீஷுவில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள், 19ம் தேதி இரவு சில பயங்கரவாதிகள் நுழைந்தனர். அங்கு வெடி சத்தம் கேட்டது; அதைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் துவங்கினர்.அந்த கட்டடத்தை சுற்றி வளைத்த சோமாலியா போலீசார் மற்றும் ராணுவத்தினர், பயங்கரவாதிகளை நோக்கி பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 30 மணி நேரம் நடந்த இந்த சண்டை நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளதாக சோமாலியா அரசு நேற்று தெரிவித்தது.
பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், எத்தனை பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில், 21 பேர் உயிரிழந்ததாகவும், 117 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு அல் – சாஹப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அல் – குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையது இந்த அமைப்பு.