வெளிநாட்டு நிதி உதவியை மறைத்தது தொடர்பான வழக்கில் 2வது முறையாக ஆஜராக மறுத்ததால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விரைவில் கைதாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி, வெளிநாடுகளில் பெற்ற நிதி உதவியை குறைத்து காட்டியதாக அந்நாட்டு தேர்தல் ஆணையத்தில் புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, நாட்டின் உயர்மட்ட விசாரணை அமைப்பான எப்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இம்ரான் கான் நேரில் ஆஜராக கடந்த 17ம் தேதி நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இதற்கு ஆஜராகாத இம்ரான், நோட்டீசை வாபஸ் பெறாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை விடுத்தார்.இந்நிலையில், 2வது முறையாக எப்ஐஏ நேற்று முன்தினம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கும் இம்ரான் ஆஜராகவில்லை. இது குறித்து எப்ஐஏ அதிகாரிகள் கூறுகையில்,‘‘3நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்ட பிறகும், இம்ரான் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்,’’என்றார்.
ஆளும் அரசுக்கு எதிராக இம்ரான் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்கிற தகவல் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.