நீர்கொழும்பு மீனவர்கள் மண்ணெண்ணெய் கேட்டு தொடர் போராட்டத்தை நேற்று ஆரம்பித்துள்ளனர்.
நீர்கொழும்பு, பெரியமுல்லை புகையிரத கடவைக்கு அருகாமையில் டொன் பொஸ்கோ சிலைக்கு முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
எமது மீன்பிடித் தொழிலுக்காக மண்ணென்ணெய் கிடைக்கும் வரை இப் போராட்டம் தொடருமென அதில் பங்குபற்றியுள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாம் கடந்த மூன்று மாதங்களாக எண்ணெய்யை காணவில்லை. தொழிலுக்கும் செல்லவில்லை. மக்களுக்கு போஷாக்குள்ள மீன்களை வழங்க முடியாதுள்ளோம்.
வாழ்வதற்கு கஷ்டமான நிலையில் உள்ளோம். எமது பிள்ளைகள் வீதிக்கு இறங்கமுன்பாக நாம் பாதைக்கு வந்துள்ளோம்.
எம்மைப்பற்றி அமைச்சர்களோ,அதிகாரிகளை கரிசனை எடுப்பதில்லை. எமக்கு மண்ணெண்ணெய் கிடைக்குமட்டும் இந்த அமைதியான போராட்டம் முன்னெடுக்கப்படும் என கலந்து கொண்ட மீனவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
மீனவர்கள் இந்தப் போராட்டத்தை கடந்த செவ்வாய்கிழமை காலை தெல்வத்த சந்தியில் ஆர்பித்து மாலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நீர்கொழும்பு மாநகர சபை வளவுக்குள் உற்சென்று அங்கு தங்கினர். இதனையடுத்து மாநகர சபை ஆணையாளர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் அவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு கோரினர்.
நகர சபை வளவிலிருந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கடற்கரை தெரு சாந்த செபஸ்தியன் தேவஸ்தான வளவில் தங்கினர். கலந்துரையாடலின் பின்னர் நேற்று வியாழக்கிழமை பகல் வேளையில் பெரியமுல்லை புகையிரத கடவை சந்தியில் கூடாரங்கள் அமைத்து மீண்டும் தொடர் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.
இங்கு போராட்டக்காரர்களின் பயன்பாட்டிற்காக இரண்டு நீர் தாங்கிகள் பொறுத்தப்பட்டுள்ளன. அவற்றிற்கு நகர சபை தீ அணைக்கும் இயந்திரம் மூலம் நீர் நிரப்புவதை அவதானிக்கமுடிந்தது.