மாணவர்களின் போராட்டத்தை கலைத்ததை கண்டிக்கும் பொன்சேகா

மக்களிடம் இருந்து எழும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு பொலிஸாரையும் இராணுவத்தையும் பயன்படுத்துவதை ஜனநாயக உலகம் ஒருபோதும் அங்கீகரிக்காத என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் தளத்தில் இட்டுள்ள பதிவில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று கொழும்பில் முன்னெடுத்த போராட்டத்தின் போது கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டன.

எனினும், போராட்டத்தை தாக்கி கலைத்தமை மிகவும் ஜனநாயக விரோத செயல் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நிராயுதபாணியான பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை தாக்கி விரட்டுவதற்கு ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் சிறப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பது ஒரு நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு செயல்படவில்லை என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

கடந்த மே மாதம் 9ஆம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ச, அமைதியான மற்றும் அகிம்சை வழியிலான போராட்டத்தின் மீது இவ்வாறு கும்பலைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினார்.

தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் ஆயுதமேந்திய பொலிஸ் மற்றும் இராணுவப் பிரிவுகளை களமிறக்குகின்றார். மே 9 தாக்குதலுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை முழு நாடும் பார்த்தது.

திறமையற்ற, பயனற்ற மக்கள் விரோத ஆட்சியாளர்கள், சாலையை வெட்டி இன்னும் தீவிரமான மக்கள் எழுச்சிக்குத் தேவையான இடத்தை உருவாக்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களிடம் இருந்து எழும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு பொலிஸாரையும் இராணுவத்தையும் பயன்படுத்துவதை ஜனநாயக உலகம் ஒருபோதும் அங்கீகரிக்காது.

சர்வதேச ஆதரவு இன்றியமையாத இந்த நேரத்தில், இதுபோன்ற தேவையற்ற அடக்குமுறை எதிர்வினைகளின் விளைவு சந்தேகத்திற்கு இடமின்றி முழு நாட்டையும் ஒடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE