ஜனநாயக விரோத அரசியல், வன்முறைகள் போன்றவற்றை தான் எதிர்ப்பதாகவும், ஒடுக்குமுறைக்காக போராடும் பல்கலைக்கழக மாணவர்கள் பகிடிவதைகளையும் நிறுத்தி சிறந்த சமூக எழுச்சிக்காக பாடுபடவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும், காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட தரப்பினருக்கும் இடையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாம் பொருளாதார சிக்கல்களிலிருந்து வெற்றிபெற வேண்டும் என்பதை ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு விளக்கிய ஜனாதிபதி; அந்தப் பொருளாதாரப் சிக்கல்களை தீர்க்க போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தான் தயார் என ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.