
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமை, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்ளும் வாசலைத் திறக்க வைத்துள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் வரவேற்றுள்ளார்.
காலத்துக்கேற்ற இந்த முடிவு, மூத்த தமிழ் தலைவர் சம்பந்தன் ஐயாவின் அரசியல் தீர்க்கதரிசனத்தின் அடையாளமாக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவை வரவேற்று அமைச்சர் நஸீர் அஹமட் வௌியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சர்வகட்சி அரசாங்கம் அவசியம் அமைக்கப்பட வேண்டும்.இந்தத் தேவையிலிருந்து பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் விலகியிருக்க முடியாது.இவ்வாறு சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதில் ஜனாதிபதி அவசரப்படுவது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை காப்பாற்றத்தான்.
இந்தத் தருணத்தை நன்குணர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இரட்டைக்காய்களை பறித்துள்ளது.ஒன்று மக்களின் நெருக்கடியை போக்க உதவுவது, இரண்டாவது தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க தருணம் பார்ப்பது.
எனவே, ஒருவகையில் இதுவும்,பேரம்பேசும் சக்தியின் ஒரு வடிவமாகவே பார்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு,முஸ்லிம் தலைமைகள் வியூகம் வகுக்காமலிருப்பது ஏன்.அரசியல் தீர்வில் நாட்டமில்லையா?அல்லது தங்களது சமூகத்துக்கு பிரச்சினைகள் இல்லையென்றா இத்தலைமைகள் சிந்திக்கின்றன.
எனவே, இன்றைய நிலையில் அரசாங்கத்துக்கு எழுந்துள்ள தேவையை அறிந்து,முஸ்லிம் தலைமைகளும் இவ்வாறான அரசியல் வியூகங்களை வகுக்க வேண்டும்.இழந்து போயுள்ள பேரம்பேசும் பலத்தை இலகுவாக பயன்படுத்த கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை முஸ்லிம் தலைமைகள் தவறவிடக் கூடாது என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.