பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வின் விசேட ஒத்திகை நிகழ்வு இன்று 02 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற இருக்கின்றது என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவரும் வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 28ஆம் திகதி நள்ளிரவு விடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் புதிய கூட்டத்தொடர் நாளை 3ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் நாளை 3ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைபவரீதியாக ஆரம்பித்துவைக்க இருக்கின்றார்.
அதனை முன்னிட்டு இன்று பாராளுமன்ற வளாகத்தில் விசேட ஒத்திகை நிகழ்வு இடம்பெற இருப்பதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணாந்து தெரிவித்தார்.
அத்துடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு மிகவும் வைபவரீதியாக இடம்பெறகின்ற போதும், ஜனாதிபதியின் ஆலாேசனைக்கமைய நாட்டு நிலைமையை கருத்திற்கொண்டு சாதாரண நிகழ்வாக மேற்கொள்ளவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதானி ஒருவர் குறிப்பிட்டார்.
நிகழ்வின் இறுதியில் இடம்பெறும் தேநீர் உபசரிப்பையும் செலவு குறைந்த வகையில் மேற்கொள்ளுமாறே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் இம்முறை முதல் தடவையாக பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கொடி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாது என படைக்கல சேவிதர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கொடி மற்றும் அதி மேதகு நாமம் பயன்படுத்துவதில்லை என கொள்கை ரீதியில் தீர்மானித்திருப்பதே இதற்கு காரணம் எனவும் தேசிய கொடி மாத்திரம் ஏற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் பாராளுமன்ற கூட்டத்தொர் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இராணுவ மரியாதை 21 வேட்டுக்கள் வெடிக்கச்செய்யும் நிகழ்வு உட்பட பல நிகழ்வுகள் விழாவில் உள்வாங்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
விழா நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டடிருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.