முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பவும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேட்டம்பே ராஜோபவனாராமதிக கப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜனாதிபதிக்கு அவர் இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இந்த நாட்டில் பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களின் ஆசியுடன் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தனது நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நாட்டுக்கு நேர்மையான சேவை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் அவர் இரட்டைக் குடியுரிமையையும் இழந்தார். 74 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், எந்தத் தவறும் செய்யாத அமைதியானவர்.
ஒரு பௌத்த அரச தலைவர் என்ற வகையில், கோட்டாபய ராஜபக்ச தனது நிறைவேற்று அதிகாரத்தை எந்த ஒரு மக்களுக்கு எதிராகவும் பிரயோகிக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் புத்திசாலித்தனமாக சிந்தித்தார்.
மகா சங்கத்தினர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ச பொறுமையுடனும் கருணையுடனும் தனது அதிகாரத்தை விட்டு விலகியதை ஒரு உண்மையான பௌத்தத் தலைவரின் மாபெரும் விலகலாகவே பார்க்கிறோம்.
அவர் ஆற்றிய அளவிட முடியாத சேவையை நன்றியுடன் நினைவுகூருமாறும், அவர் பாதுகாத்த தாய்நாட்டிற்குத் திரும்புவதோடு, முன்னாள் ஜனாதிபதிகளுக்குத் தேவையான பாதுகாப்பையும் அனைத்து சலுகைகளையும் வழங்குமாறும்கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.