அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கி நாடு எதிர்நோக்கியுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை முறியடிப்பதற்கு புதிய பாதையில் பயணிப்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நேற்று (30) பிற்பகல் மல்வத்து மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்த ஜனாதிபதி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டத்தில் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று, (30) மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்கள் தலைமையிலான நிறைவேற்று சபை மகாசங்கத்தினரை சம்பிரதாயபூர்வமாக சந்தித்து, ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
மல்வத்து மகா விகாரை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்வருமாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, சம்பிரதாயபூர்வமாக, நான் செய்ய வேண்டிய இரண்டு கடமைகள் இருந்தன. பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடுதல். அதற்கு முன்னர் சம்பிரதாயபூர்வமாக மல்வத்து – அஸ்கிரி மகா விகாரைகளில் ஆரம்பித்து ஏனைய விகாரைகளில் உள்ள மகாநாயக்க தேரர்களை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வது, உங்களிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்களுக்கும் கிடைத்த சக்திக்கும் நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன். இந்த நேரத்தில், நீங்கள் வழங்கிய ஆதரவு எனது பணிகளுக்கு பலமாக அமைந்தது.
நாடும் நாட்டின் பொருளாதாரமும் அழிவின் விளிம்பில் இருந்ததால்தான் நான் முதலில் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டேன். ஒரு நாடாக நாம் இன்று மிகவும் கடினமான இடத்தில் இருக்கிறோம். இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும். சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு, இந்த பொருளாதாரத்தை சீர்படுத்தி 2023, 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய வகையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நான் செயற்பட்டு வருகின்றேன். இது கடினமானதொரு பணியாகும். ஆனால் அதனை செய்யவில்லை என்றால், அது இன்னும் கடினமாக இருக்கும். மருந்து கொடுத்து நோயாளியை குணப்படுத்த முயற்சி செய்வதா அல்லது மருந்து கொடுக்காமல் நோயாளியை இறக்க விடுவதா என்று பார்க்க வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.