2022, ஜூன் இறுதிக்குள் இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணிக் கையிருப்பு 1.85 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக மத்திய வங்கி இன்று தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் கையிருப்பு 7.6 பில்லியன் டொலர்களாக இருந்தன. எனினும் அன்றில் இருந்து அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக கையிருப்பு வீழ்ச்சியடைந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கையிருப்பு 2020 இறுதிக்குள் 5.7 பில்லியன் டொலர்களாகக் குறைந்தது. மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, கையிருப்பு 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 3.1 பில்லியன் டொலர்களாகவும், 2022 மார்ச் இறுதியில் 1.9 பில்லியன் டொலர்களாகவும் குறைந்துள்ளது.
கையிருப்பு குறைவினால் எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
எனினும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் பல நன்கொடையாளர்கள் நிதி உதவியை வழங்குவதற்கு முன்னர் இலங்கை அரசாங்கம், ஒரு பேரண்ட பொருளாதாரத் திட்டத்தை முன்வைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.