இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் 14 நாட்கள் தங்கள் நாட்டில் தங்கிக்கொள்ள சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டை ஆண்ட ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிரான மக்கள் போராட்டமாக மாறியது.
ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்து சூறையாடும் அளவுக்கு நிலைமை விபரீதமாக மாறியபோது, கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 13-ம் திகதி பதவியை ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு மாலத்தீவுக்கு ஓட்டம் பிடித்தார். அங்கேயும் அவருக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கினர்.
இதையடுத்து மறுநாளில் (14-ம் திகதி) அவர் சிங்கப்பூருக்கு சென்றார். அங்கு சென்றதும் அவர் ஜனாதிபதி பதவியை விட்டு விலகினார்.
சிங்கப்பூரில் யாருக்கும் அரசியல் தஞ்சம் அளிப்பதில்லை. இதனால் அவருக்கு 14 நாட்கள் தங்கிக்கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. முதலில் அங்கு சிட்டி சென்டரில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் தங்கினார். பின்னர் ஒரு தனியார் இல்லத்துக்கு அவர் சென்று விட்டார். வெளியே யாரும் அவரைப் பார்த்ததாக தகவல் இல்லை.
நேற்று முன்தினம் கொழும்பு நகரில் மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் மந்திரிசபை செய்தி தொடர்பாளர் குணவர்த்தனா நிருபர்களிடம் பேசுகையில்,
“கோட்டாபய ராஜபக்ஷ ஒளிந்து கொண்டிருக்கவில்லை. அவர் சிங்கப்பூரில் இருந்து திரும்பி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது” என பதில் அளித்தார். ஆனாலும் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் கூடுதல் தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் 14 நாட்கள் (ஓகஸ்டு மாதம் 11-ம் திகதி வரை) சிங்கப்பூரில் தங்கிக்கொள்வதற்கு அந்த நாட்டின் அரசு அனுமதி வழங்கி உள்ளது. புதிய விசாவும் வழங்கி இருக்கிறது.