போதைப்பொருள், சமூகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு கொலைகாரனை போன்றது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் பயன்பாடு. போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைபொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஜூன் 26ஆம் திகதி “சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.
போதைப்பொருட்களை பயன்படுத்துதல், போதைப்பொருட்களை கடத்துதல், போதை பொருள் விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் மூலம் அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் உலகில் ஆங்காங்கே நடக்கின்றன. புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போதைப்பொருட்களை கும்பல் கடத்துகிறது.
போதைக்கு அடிமை ஹெராயின், அபின் , கஞ்சா உள்ளிட்ட பலவகையான போதைப்பொருட்கள் உலகில் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்யப்படுகிறது. போதைப்பொருள் பயன்படுத்தி, அவர்களை மட்டுமல்லாமல், தங்களை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சீரழிக்கின்றனர். சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியாத அளவுக்கு, அதற்கு அடிமையாகி உள்ளனர். இன்றைய சூழலில் இளைஞர்கள் மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாவது வருத்தமான விஷயம். இம்மாதிரியான மாணவர்களுக்கு சரியான விழிப்புணர்வு வழங்கி அப்பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். இன்றாவது அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் அனைவரும் இதை பகிர்ந்து இன்றைய நாளை போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெளிவூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் . – ப்ரியமதா பயஸ்