பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்டிய நகரங்களின் பாடசாலைகளுக்கும், ஏனைய மாகாணங்களின் பிரதான நகர பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பிரதான நகரங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மேல் மாகாணம் உட்பட சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருக்கு போக்குவரத்துக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பிரதேச மட்டத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை நடத்துவதற்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளில் சமூகமளிக்க முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு வலய கல்வி பணிப்பாளருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் சில மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாவிட்டால் அவர்களுக்கு இணையவழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வி அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, எரிபொருள் இன்மையால், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கான ஆறு மையங்கள் மூடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் காலை நேரத்தில் கடமைக்கு செல்லமுன், 6 முதல் 7 மணிவரையான காலப்பகுதியில் சென்றால், எரிபொருளை வழங்க எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தயாரென்ற செய்தி தமக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

அத்துடன், மாலையில் கடமை முடிவடைந்து 5 முதல் 6 மணிவரையான காலத்தில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்றால், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், ஆசிரியர்களுக்கு அவசியமான ஒத்துழைப்பு வழங்கத் தயாரென தெரிவிக்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், எரிபொருள் நெருக்கடி காரணமாக, இன்று முதல், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE