கொழும்பு- அலரிமாளிகைக்கு முன்பாக இருக்கும் பேரவாவிக்குள் தள்ளிவிடப்பட்ட உறுப்பினர்களில் மூவர், பிரேத ஊர்தியில் ஏறி, மறைந்துகொண்டு வீடுகளுக்குச் சென்றிருந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த “மைனா கோ கம”, காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த “ கோட்டா கோ கம” ஆகியவற்றின் மீது, மே.9 ஆம் திகதியன்று தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல்களில் பலர் பேர வாவிக்குள் தள்ளிவிடப்பட்டனர்.
அதில்,கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரதேச சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவரும் அடங்கியிருந்தவர்கள். அவர்களே, பிரேத ஊர்தியில் ஏறி, மறைந்திருந்து வீடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
அந்த மூவருடன் மற்றுமொருவரையும் பிடித்து கடுமையாக தர்ம அடிக்கொடுத்தவர்கள், ஏனையோருடன் அந்த நால்வரையும் பேர வாவிக்குள் தள்ளிவிட்டனர். அவர்கள் வாவிக்குள் நீண்ட நேரம் தத்தளித்துகொண்டிருந்தனர். ஒருமாதிரி கரையேறிய அந்த நால்வரும், மறைவான இடமொன்றில் மூன்று நாட்களாக மறைந்திருந்துள்ளனர்.
அதன்பின்னர், பிரதேச சபை உறுப்பினர்களில் ஒருவர், கம்பஹா மாவட்டத்திலுள்ள சவப்பெட்டி தயாரிக்கும் தன்னுடைய நண்பனுக்கு அழைப்பை எடுத்து விடயத்தை தெளிவுப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் பாதுகாப்பாக வீடுகளுக்கு திரும்புவதற்காக பிரேத ஊர்தியொன்றை அனுப்பிவைக்குமாறு கேட்டுள்ளார். தப்பிச் செல்வதற்கு மாற்று வழிகளே இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.
நண்பனின் வேண்டுகோளுக்கு இணங்க, நால்வரை ஏற்றிச்செல்லக்கூடிய பிரேத ஊர்தியை , அவர்கள் மறைந்திருந்த இடத்துக்கு அனுப்பிவைத்துள்ளார். அதில் ஏறிக்கொண்ட நால்வரும் கொழும்பிலிருந்து இரவு வேளையில் புறப்பட்டு, தங்களுடைய வீடுகளுக்கு இருட்டில் சென்றுள்ளனர்.
எனினும், தங்களுடைய வீடுகளுக்கு பிரேத ஊர்தி வருவதை கண்ட குடும்பஸ்தினர் அச்சத்தில் இருந்தனர்.பிரதேச சபை உறுப்பினர்கள் மூவரும் பிரேத ஊர்தியில் ஏறி, மறைந்திருந்து வீடுகளுக்கு திரும்பிய விவகாரம் அக்கம் பக்கத்தினரின் காதுகளுக்குச் சென்றமையால் அந்த இரகசியம் அம்பலமானது.