உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவு கூறப்படுகின்றது.
நமது நாட்டில் கடந்த மூன்று வருடங்கள் பாரிய சவாலுக்கு உள்ளாகியதும் தொழிலாளர் வர்க்கமே ஆகும். அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த உறுதி பூண்டவர்களும் அவர்கள்தான். நாளுக்கு நாள் அவர்கள் மீதான அழுத்தங்கள் தற்போது அதிகமாக உள்ளன.
அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும், நிலவுகின்ற சிக்கலான நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் என்ற வகையில் பல்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்நியச் செலாவணி இழப்பானது பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. அவை அனைத்தையும் முகாமைத்துவம் செய்வதுதான் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழியாகும்.
ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமை யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதைப் பின்தொடர்வதற்குப் பதிலாக, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதில் கவனம் செலுத்துவதுதான் இப்போது நாம் செய்ய வேண்டியது. அதற்கான மிகவும் பொருத்தமான மற்றும் செயற்திறன்மிக்க வேலைத்திட்டத்திற்குச் சென்று மக்களின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும்.
இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அரச தலைவர் என்ற வகையில் மக்கள் சார்பாக நான் அழைத்தேன். ஒவ்வொறு நொடியும் மக்களின் துன்பத்தைத் தீர்க்கக்கூடிய வழிமுறைகளுக்குச் சென்று, தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதே எமது குறிக்கோள்.
இந்த தொழிலாளர் தினத்தில், அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்ள மக்களுக்காக ஒருமித்த கருத்துக்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நான் மீண்டும் ஒருமுறை அழைக்கிறேன்.
உழைக்கும் மக்களுக்காக அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, போராட்டத்தை மக்கள் சார்பான புரட்சிகர மாற்றத்துடன் நேர்மறையான திசையில் கொண்டு செல்ல ஒன்றிணையுமாறும் உழைக்கும் மக்களிடம் கெளரவமாக கேட்டுக்கொள்கிறேன்.