நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ள எரிசக்தித் தட்டுப்பாடு குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சீனத் தூதுவர் கி சென்ஹொங்விற்கு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் நிதி உதவி மற்றும் இலங்கையின் கடனை மறுசீரமைத்தல் போன்றவற்றிற்காக நடைபெற்று வரும் கலந்துரையாடல் உட்பட, தற்போது நிலவுகின்ற சூழ்நிலையை உடனடியாக சமாளிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்து தூதுவருக்கு விளக்கிய அமைச்சர் பீரிஸ், குறிப்பாக இக்கட்டான நேரத்தில் நிதியமைப்பிற்கான மேலதிக உதவிகளை நல்குமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்தார்.
நேற்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ். சீனத் தூதுவர் கி சென்ஹொங் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கத்தின் நேரடி ஆதரவு, பிராந்திய அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் சீனாவின் ஆதரவு உட்பட சாத்தியமான எல்லா வழிகளிலும் சீன அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்று தூதுவர் கி உறுதியளித்தார்.
5000 டொன் அரிசி (முன்னர் அறிவிக்கப்பட்ட 2000 டொன்களுடன்), மருந்துகள், உற்பத்திப் பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் உட்பட, இலங்கைக்கு 200 மில்லியன் ரென்மின்பி பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு சீனா சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது.
மேலும், யுனான் மாகாணம் 1.5 மில்லியன் ரென்மின்பி பெறுமதியான உணவுப் பொதிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
சீனாவின் உறுதியான ஆதரவுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இலங்கையின் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலின் போது, மக்கள் பரிமாற்றம், பலதரப்பு மன்றங்களிலான ஆதரவு, வறுமை ஒழிப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது.