கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டிலுள்ள 3 தேவாலயங்கள் உள்ளிட்ட கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் அடங்களாக 07 இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்(21) மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது.
மிலேச்சத்தனமாக பயங்கரவாதத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 269 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் அங்கவீனமடைய நேரிட்டது.
பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(21) பல பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 196 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களுள் 81 பேருக்கு எதிராக கம்பஹா, கொழும்பு, கண்டி, குருணாகல், புத்தளம் நுவரெலியா, மட்டக்களப்பு மற்றும் கேகாலை மேல் நீதிமன்றங்களில் 27 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.