
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், உணவு மற்றும் எரிபொருள் கொள்வனவுக்காக மேலும் 2 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை ஐந்து மூலங்களை மேற்கோள்காட்டி சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, 1948 ஆம் ஆண்டின் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள இலங்கை, தனது நட்பு நாடுகளான இந்தியா, சீனாவிடம், கடன் மீள செலுத்தல் மற்றும் உணவு, எரிபொருள் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவி கோரியுள்ளது.
இந்த நிலையிலேயே இலங்கைக்கு நிச்சயமாக உதவப்போவதாகவும் நாணய பரிமாற்றம் மற்றும் கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவிக்கின்றது.
இதற்கு முன்னரும் இந்தியா இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்கியது. அத்துடன், எரிபொருளுக்காக இலங்கை மேலும் 500 மில்லியன் டொலரை இந்தியாவிடம் எதிர்பார்ப்பதாக அறிய முடிகிறது.
அத்துடன் இலங்கை சீனாவிடமும் 2.5 பில்லியன் கடனுதவி கோரியுள்ள நிலையில், அக்கோரிக்கை கலந்துரையாடல் மட்டத்தில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.