ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஆளும்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் நேற்று முன்தினம் ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் என்பன குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிற்பகல் 4.30க்கு ஆரம்பமான குறித்த சந்திப்பானது இரவு 8.30 வரையில் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி காபந்து அரசாங்கம் ஒன்றை ஒரு வாரத்திற்குள் ஸ்தாபிக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளது.
அதன் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறில்லை எனில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அமைச்சு பொறுப்புக்களை துறந்து சுயாதீனமாகவோ அல்லது எதிரணியாகவோ செயற்பட தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.