பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
பாகிஸ்தான் தேசிய சபையில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷெய்ன் ரஷீட் அஹ்மட், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பமாகி, ஏப்ரல் 3ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகளே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளன.
பாகிஸ்தான் தேசிய சபையில் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரிப் இன்று நம்பிக்கையில்லா பிரேரணையைத் தாக்கல் செய்தார்.
இந்தப் பிரேரணைக்கு 161 உறுப்பினர்கள் ஆதரவளிப்பததாக தெரிவிக்கப்படுகிறது. 342 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் தேசிய சபையில், தீர்மானம் வெற்றி பெறுவதற்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 172 உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே, இம்ரான் கான் பிரதமர் பதவியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.