
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களை கூடுதல் கட்டணமின்றி தங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. ரஷ்ய படைகளின் உக்கிரமான தாக்குதல்களில் உக்ரைன் நகரங்கள் அனைத்தும் உருக்குலைந்து வருகின்றன.
உக்ரைன் மீதான போரின் முதற்கட்ட இலக்கை எட்டிவிட்டதாகவும், இனி உக்ரைனின் கிழக்கு பகுதிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தபோவதாகவும் ரஷ்யா கூறினாலும் இன்னும் அதை செயல்படுத்தவில்லை.
மாறாக உக்ரைன் நகரங்களை சுடுகாடுகளாக மாற்றும் மூர்க்கத்தனமான தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன.
லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிர் பிழைப்பதற்காக அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இதேபோன்று உக்ரைனின் உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி விட்டனர்.
உக்ரைனில் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்படிப்பு பயின்று வந்த சுமார் 20,000 இந்திய மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள் ஆவர்.
உக்ரைனில் போர் இன்னும் முடிவுக்கு வராததால், நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அவர்கள் படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசும் ஆலோசித்து வருகிறது.
இதனிடையே, போர் காரணமாக படிப்பை பாதியில் விட்டு நாடு திரும்பிய இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களை தங்கள் நாட்டில் படிப்பை தொடர வைக்க ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது.
இதற்காக இந்திய மருத்துவ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை ரஷ்யா மற்றும் கிரீமியாவில் உள்ள ரஷ்ய பல்கலைக்கழங்கள் அணுகியுள்ளன.
கூடுதல் கட்டணம் மற்றும் நுழைவுத்தேர்வு இன்றி தங்கள் பல்கலைக்கழகங்களில் இந்த மாணவர்களை சேர்த்துக் கொள்ளப்போவதாக ரஷ்ய பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
உயர்கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறிய தங்களின் எதிர்காலம் பற்றி அச்சமடைந்து தவிக்கும் மாணவர்களுக்கு ரஷ்யாவின் இந்த அறிவிப்பு ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா போன்றே ஏற்கனவே கஜகஸ்தான், ஜார்ஜியா, அர்மீனியா, பெலாரஸ், போலந்து போன்ற நாடுகளும் இந்த உதவியை வழங்க முன்வந்துள்ளன.