இலங்கை அரசு – தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பேச்சுவார்த்தைகளை இந்தியா வரவேற்கிறது என இந்திய உயர் தூதுவராலயம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவடிவம் வருமாறு .
1. இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், நா.உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவை இன்று சந்தித்தார்.
2. இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான மார்ச் 25 சந்திப்புக் குறித்து, த.தே.கூட்டமைப்புப் பிரதிநிதிகள் அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பேச்சுவார்த்தை குறித்த இறுதி நிலைமைகள் பற்றி விளக்கினர். அரசியல் கைதிகளின் விடுதலை, காணிப் பாவனை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துதல், புலம்பெயர்ந்தோர் முதலீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதாக, அவர்கள் இந்திய அயலுறவுத் துறை அமைச்சருக்குத் தெரிவித்தனர்.
3. முன்னதாக, இந்திய அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை ஜனாதிபதியை சந்தித்தபோதும் த.தே.கூட்டமைப்புடனான இலங்கை அரசின் சந்திப்புக் குறித்த விடயம் வந்திருந்தது . பின்னர் மாலையில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இருந்து, இந்த விடயம் தொடர்பாக விரிவான விளக்கத்தை அமைச்சர் ஜெய்சங்கர் பெற்றிருந்தார்.
4. இந்த அனைத்துத் தொடர்பாடல்களிலும் இலங்கை அரசாங்கம்-த.தே.கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பான முன்னேற்றங்களை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றுள்ளார். ஒன்றுபட்ட இலங்கையின் கட்டமைப்பிற்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான இலங்கைத் தமிழர்களின் அவாக்களை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
5. வடக்கு – கிழக்கின் பொருளாதார மீட்சிக்கான இந்தியாவின் பங்களிப்பு, நடைபெற்ற அனைத்துக் கூட்டங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யாழ் கலாசார நிலையத்தின் இணையவழித் திறப்பு விழாவை இலங்கையின் பிரதமருடன் இணைந்து நடத்தியதன் திருப்தியை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படுத்தினார்.
6. அமைச்சர் ஜெய்சங்கர் இன்னொரு சந்திப்பை மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மேற்கொண்டிருந்தார். மீனவர்கள் பிரச்சினைகள் குறித்தும், அதிகாரப்பகிர்வு குறித்தும் கருத்துகளை அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.
கொழும்பு
28 மார்ச் 2022