
போலியான ஆவணங்களைத் தயாரித்தும், போலியான தகவல்களை முன்வைத்தும் 47 பேர் 2017ஆம் ஆண்டில் அரச ஈட்டு முதலீட்டு வங்கியில் 68 மில்லியன் ரூபாய் கடன்களைப் பெற்றுக் கொண்டமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) புலப்பட்டுள்ளது.
கடன் பெற்றவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருப்பதுடன், இது தொடர்பில் இன்னமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குழுவிற்கு சமுகமளித்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக இது தொடர்பில் பணியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், இதனுடன் தொடர்புபட்ட வெளிநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.