சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆறு மாதங்களிற்கு மேல் நீடிக்கலாம் இந்தியாவின் கடன் உதவியிலிருந்து கிடைத்துள்ள நிவாரணம் மே மாதம் நடுப்பகுதி வரை நீடிக்காது என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்படும் வரை தேவைப்படும் நிதியை பெறுவதற்கான வழிவகைகளை அரசாங்கம் ஆராயவேண்டும் என சர்வகட்சிமாநாட்டிலே தெரிவித்துள்ளார்.
எங்களிற்கு ஒரேயொரு வழியே உள்ளது ,கூட்டமைப்பை உருவாக்க கூடிய புதிய நட்பு நாடுகளை அணுகி நிதிஉதவியை கோருவதே அது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாடுகளில் இந்தியா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இடம்பெற்றிருக்கவேண்டும் இவை சர்வதேச நாணயநிதியத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் 2002 முதல் 2004 வரையான காலப்பகுதியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டவேளை நாங்கள் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவேளை நாங்கள் இதுபோன்ற உலகநாடுகளின் கூட்டமைப்பை கொண்டிருந்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.