வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினது சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பில் அச்சங்கம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான எமது போராட்டம் தற்போது 1847 ஆவது நாளாக தொடர்கிறது.
நூற்றுக்கு மேற்பட்ட சக போராட்ட உறவுகளை இழந்த நிலையிலும், பல வகையான அச்சுறுத்தல்கள் மத்தியிலும், சர்வதேச நீதி கோரி போராட்டம் தொடர்கிறது.
இந்த நிலையில், நிதியமைச்சர் அலி சப்ரி வடக்கு,கிழக்கு வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை மழுங்கடிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
தற்போது ஒரு இலட்சம் ரூபாவும், மரணச் சான்றிதழும் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி பெற்றிருக்கின்றார்.
இது நீதிக்கான எமது போராட்டத்தினை முற்றிலுமாக உதாசீனப்படுத்துவதுடன், விலைமதிக்க முடியாத எமது உறவுகளின் உயிர்களுக்கு விலைபேச முற்படுவதுமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த திட்டத்தினை நாம் முற்றுமுழுதாகப் புறக்கணித்து, அதற்கு கண்டனம் வெளியிடுவதுடன், சர்வதேசத்தை நோக்கிய நீதிக்கான போராட்டத்தை முனைப்புடன் தொடருவோம் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினது சங்கம் தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.