உக்ரைன் தலைநகரை நோக்கி வேகமாக முன்னேறி வரும் ரஷ்ய ராணுவத்தினர், மெலிடோபோல் நகரின் மேயரை கடத்திச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று கூறியதாவது:தற்போது நடக்கும் போரில், ரஷ்யாவால் உக்ரைனை ஒருபோதும் வீழ்த்த முடியாது. ரஷ்ய எல்லையை ஒட்டி, 13 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும், ‘நேட்டோ’ படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த படையினர் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால், அது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுத்துவிடும். இதன் காரணமாகவே, ரஷ்யா மீது தாக்குதல் நடத்தாமல் அமைதி காத்து வருகிறோம். எனினும், உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா தொடர்ந்து வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.