இந்தியா விண்ணில் ஏவி சோதனை செய்த ஏவுகணை தங்கள் நாட்டின் எல்லை நகரத்தில் விழுந்து இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார், கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணிக்கு இந்தியாவில் ஹரியானா மாநிலம் சிறுசா நகரத்தில் இருந்து ஏவப்பட்ட அதிவேக ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மியா சானு என்ற பகுதியில் விழுந்து இருப்பதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட சோதனையில் அது சூப்பர் சொனிக் வகை ஏவுகணை என்றும் ஏவுகணையை ஆயுதங்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், இந்திய ஏவுகணை விழுந்ததில் தனியார் சொத்துக்கள் சில சேதம் ஏற்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வான்வழியில் பயணிகள் விமான சேவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் 40,000 அடி உயரத்தில் 124 கிமீ தூரம் பயணித்து பாகிஸ்தான் எல்லை நகரத்தை இந்திய ஏவுகணை தாக்கியதாக பாபர் கூறினார். பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணையின் பாகங்களை பறிமுதல் செய்து சோதனையிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். உரிய தகவல் அளிக்காமல் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து இருக்கும் பாகிஸ்தான் இது குறித்து இந்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. ஏவுகணை தாக்குதல்கள் குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய ஒன்றிய அரசோ, விமானப்படையோ, பாதுகாப்பு அமைச்சகமோ இதுவரை பதில் அளிக்கவில்லை.