முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு கடந்தாண்டு திமுக அரசு பதவி ஏற்றதும் பரோல் வழங்கி உத்தரவிட்டது.
தொடர்ந்து 9 மாதங்களாக பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில் பேரறிவாளன் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தம்மை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
இந்த விசாரணையின் போது 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சர்வதேச பின்னணி குறித்த பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் விசாரணைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பேரறிவாளன் மனுவுக்கும் ஆளுநர் தரப்பின் கருத்துக்கும் தொடர்பு இல்லை எனவும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க காலதாமதம் ஆகும். என்பதால் தற்போது பரோல் விடுப்பில் இருக்கும் பேரறிவாளன் யாரையும் சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறார்.
ஆகையால் அவருக்கு இந்த வழக்கு முழுமையாக முடியும் வரை பிணை வழங்க வேண்டும் என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது. அதேசமயம் இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரித்துவருகிறது என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்குவது என நாங்கள் தீர்மானமாக உள்ளோம் என மீண்டும் மீண்டும் நீதிபதிகள் கூறி வந்தனர். இந்நிலையில் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்