உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை மீட்க 130 பஸ்கள் தயாராக உள்ளதாக ரஷ்ய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு , அங்கிருந்து விமானம் மூலம் டில்லி அழைத்து வரப்படுகின்றனர். இதுவரை 17 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 7 ஆயிரம் பேரையும் மீட்க துரித கதியில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மைய தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி பகுதியில் சிக்கி உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினரை, ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதிக்கு அழைத்து வர 130 பஸ்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.