உக்ரைனினுள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சப்ரோசியா அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியது.
தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யபடை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் உள்கட்டமைப்புகள் செயல்படாமல் இருந்த போதிலும் அந்நாட்டு ராணுவ வீரர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் மீதான 9 ஆம் நாள் தாக்குதலில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை சுற்றிவளைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியதால், தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில், அதனை முற்றிலும் ரஷிய படைகள் கைப்பற்றியிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சப்ரோசியா அணு உலையில், ரஷ்ய ஏவுகணைகள் வந்து விழுந்து வெடித்ததில், பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதுகுறித்து, உக்ரைனின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆய்வாளர் தனது முகநூல் பக்கத்தில், சப்ரோசியா அணுமின் நிலையத்தின் நிர்வாகக் கட்டடத்தையும், அதன் நுழைவு வாயிலையும், ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் வசம் கொண்டுவந்துவிட்டனர். அதேவேளையில், அணுமின் சக்தி தொடர்ந்து கிடைக்கும் வகையில், அணுமின் நிலைய ஊழியர்கள், தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கதிர்வீச்சின் அளவும் இயல்பான அளவிலேயே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.