ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உக்ரேன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து ரஷ்யாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான சென் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில், போர் எதிர்ப்புப் போராட்டக்காரர்களைக் கைது செய்துள்ளதாக ரஷ்ய பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
போருக்கு எதிரான பதாகைகளை வைத்திருந்த போராட்டக்காரர்கள் ரஷ்ய அரசுக்கு எதிராக கோசமிட்டனர். கடந்த வியாழன் முதல் ரஷ்யாவில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 7,615 பேர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, மொஸ்கோவிற்கு வெளியே உள்ள ஒரு தண்டனைக் காலனியில் இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.