மட்டக்களப்பு வவுணதீவு பொது சந்தைக்கு முன்னால் நடைபெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க கோரும் கையெழுத்து போராட்டத்தினை அவ்விடத்தில் தொடர்ந்து நடாத்த முடியாது என பொலிஸ் அனுமதிக்க மறுத்ததால், கையெழுத்து போராட்டம் வேறு இடத்துக்கும் மாற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினரால் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . நேற்று (01.03.2021) வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் லோ.தீபாகரனின் ஒழுங்கமைப்பில், மட்டக்களப்பு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சண்முகராசாவின் தலைமையில் வவுணதீவு பொது சந்தைக்கு முன்னால் கையெழுத்து சேகரிக்கு பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இதன்போது வவுணதீவு பொலிஸார் நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்து , அனுமதி பெறப்படாது நிகழ்வினை நடத்துவதாக கூறியதுடன் போக்குவரத்து இடைஞ்சல் மற்றும் கொரொனா தொற்று பரவலுக்கான சாத்திகக் கூறுகள் உள்ளதால் நிகழ்வினை நடாத்த முடியாது என கூறியதுடன், அங்கு வந்திருந்தவர்களையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.
இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், .மண்முனை மேற்கு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பொ.செல்லத்துரை (கேசவன்) உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.