உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4 ஆவது நாளாக பயங்கர தாக்குதலை நடத்தி வருவதால் உயிருக்கு பயந்து 1.5 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதேநிலை நீடித்தால் அகதிகளின் எண்ணிக்கை 50 லட்சமாக உயரும் என்று ஐ.நா அமைப்பு எச்சரித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, இன்றுடன் 4 ஆவது நாளாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இருநாடுகளுக்கிடையே நிலவும் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வாழ்விடங்களில் தாக்குதல் நடத்தப்படாத நிலையில், தற்போது உக்ரைன் நகரில் மக்கள் வசிக்கும் இடங்களிலும் ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட பல நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 28 நாடுகள் உக்ரைனுக்கு மருத்துவ மற்றும் ராணுவ உதவிகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளன.