உக்ரைன் மீதான போருக்கு இடையூறு ஏற்படுத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த நேரிடும் என ரஷ்ய அதிபர் புடின் பகிரங்கமாகவே எச்சரித்து இருக்கிறார்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள், கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. தனக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு ரஷ்யா பல்வேறு மறைமுக மிரட்டல்களை விடுத்து வருகிறது.
இந்நிலையில், தனது மிரட்டலின் அடுத்த ஆயுதமாக, விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தையும் ரஷ்யா எடுத்துள்ளது.
இது குறித்து ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜெனரல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சர்வதேச விண்வெளி நிலையம், அமெரிக்கா, ஜப்பான், கனடா மற்றும் சில நாடுகளின் கூட்டு முயற்சியால் இயங்கி வருகிறது. அதில் 4 அமெரிக்கர்கள், 2 ரஷ்யர்கள், ஒரு ஜெர்மனியர் என 7 பேர் பணியாற்றி வருகின்றனர். விண்வெளி மையம் ரஷ்ய என்ஜின்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. எங்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் விண்வெளி நிலைய செயல்பாடுகளில் பிரச்னை ஏற்படும். விண்வெளி நிலையத்தை பாதுகாக்க முடியாமல் போனால், 500 டன் எடை உடைய விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீனாவில் விழும் ஆபத்து உள்ளது. அது, ரஷ்யாவின் மீது பறக்கவில்லை, அதனால் உங்களுக்குதான் அனைத்து பாதிப்பும் ஏற்படும். அதற்கு நீங்கள் தயாரா? ஐரோப்பா, அமெரிக்காவில் விழுந்தால் அதை நீங்கள் தாங்குவீர்களா?’ என்று எச்சரித்துள்ளார். ரஷ்யாவின் இந்த மறைமுக மிரட்டல் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.