சைவ அடையாளங்கள் வெளிப்பட்ட இடத்தில் இன்று புத்த கோபுரம் அமைக்கும் பணி தீவிரம்- ரவிகரன்

சைவ அடையாளங்கள் வெளிப்பட்ட இடத்தில் இன்று புத்த கோபுரம் என்று கூறி புத்த சமயத்தை திணிக்கும் முகமாக 75 வீதமான கட்டுமான பணியை செய்திருக்கின்றார்கள். என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – குமுழமுனை குருந்தூர்மலை விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

குருந்தூர் மலை சம்மந்தமாக எங்களுடைய சைவ அடையாளங்கள், யாவும் அழிக்கப்பட்டிருப்பதை ஏற்கனவே 27.01.2021 ஆம் ஆண்டு அங்கு நானும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் மற்றும் சிறீதரன் ஆகியோர் கொண்ட குழு நேரில் சென்று பார்வையிட்ட போது எங்களால் காணக்கூடியதாக இருந்தது.

உடனடியாக அன்றே நான் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துவிட்டு காவற்துறையினர் கேட்டு கொண்டதற்கிணங்க 29.01.2021 அன்று அந்த இடத்துக்கு காவற்துறையினரை அழைத்து சென்று எங்களுடைய சைவ அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதனை காண்பித்திருந்தேன்.

அந்த நேரம் புத்த விகாரை அந்த இடத்திற்கு அருகாமையில் இல்லை. தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வு நடவடிக்கைக்காக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆய்வு செய்ய போவதாகத்தான் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்த தினம் என்று கூறப்படும் நாள் அன்று  04.02.2022 ஆம் ஆண்டு அங்கே சென்ற போது கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கை சுதந்திரம் அடைந்த தினம் என்று சொல்லப்படும் நாளன்று சுதந்திரம் இல்லை என்ற நிலையில் எங்களுடைய மத அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. எங்களுடைய மொழி உரிமை பறிக்கப்படுகின்றது. எங்களுடைய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இப்படியாக, தமிழர்களுடைய வாழ்வாதாரம்  சகலதும் பறிக்கப்படுகின்றது. இவற்றை வெளிக்கொண்டு வரும் முகமாக நாங்கள் சென்றோம்.  இது சம்பந்தமாக ஒரு ஊடக அறிக்கையை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான, எம்.ஏ சுமந்திரன் 3ஆம் திகதி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதன்படி நாங்கள் 4ஆம் திகதி நூறு பேரளவில் அங்கு சென்று பார்வையிட்ட போது அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தோம். தாது கோபுரம் அதாவது விகாரை என்று சொல்லப்படும் அந்த தாது கோபுரம் முக்கால்வாசி அளவில் 75 வீதமான அளவு அது கட்டி முடிக்கப்பட்டிருந்தது.ஏற்கனவே நாங்கள் பார்க்கப்போகும் போது அந்த இடத்தில் ஒன்றுமே இல்லை. ஆனால் அதன் பின்னர் அந்த அடையாளங்கள் தோண்டி பார்க்கப்பட்ட போது எட்டுமுக சிவலிங்கம் அங்கே வெளிப்பட்டதாக, ஊடகங்களில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.

அப்படியாக சைவ அடையாளங்கள், வெளிப்பட்ட இடத்தில் இன்று தாது கோபுரம்  என்று கூறி புத்த சமயத்தை திணிக்கும் முகமாக 75 வீதமான கட்டுமான பணியை செய்திருக்கின்றார்கள். அதுவும் பழைய செங்கற்களாலான கட்டிடங்களாக தாது கோபுரம் அமைக்கப்பட்டு வருகின்றன.  சிலவேளை பழைய கற்களால் அப்போதே கட்டப்பட்டு இருந்தது என காட்டுவதற்காகவோ தெரியாது. புத்த சமயத்தை திணிக்கும் நோக்கத்தோடு தொல்லியல் திணைக்களம் ஈடுபடுகின்றதா? தொல்லியல் திணைக்களம் என்பது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பே ஒழிய அதற்கு நாங்களும் மறுப்பில்லை.ஆனால் ஆய்வு என்ற போர்வையில் தொல்லியல் திணைக்களத்தினர் அங்கே கட்டுமான பணி மேற்கொள்வதை நாங்கள்  காணக்கூடியதாக இருந்தது.

இருந்தாலும் நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் சட்டத்தரணியாக இருப்பதால் அவர் ஊடாக இதற்கான வழக்கு கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.கடந்த எட்டாம் திகதி அந்த வழக்கு நடைபெற்றது. கொவிட்- 19 நடவடிக்கை காரணமாக நாங்கள் செல்லவில்லை. அடுத்த தவணைக்கு நாங்களும் செல்வோம்.

அந்த வழக்கில் ஏற்கனவே எங்களுடைய மத நடவடிக்கைகளுக்கு தாங்கள் இடையூறு விளைவிக்கவில்லை என்றும், அதே நேரம் அவர்கள்  காட்டிய படங்களில் இவ்வளவு பெரிய ஒரு கட்டுமான பணி புத்த விகாரைக்காக நடைபெறுவதும் இல்லை என்பதையும் சுமந்திரன்   தெளிவுபடுத்தினார்.

இது சம்பந்தமாக சத்தியக்கடதாசி மூலம் இணைப்பு செய்து நிச்சயமாக அடுத்த தவணைக்கு எங்களுடைய  மத வழிபாடுகள் சம்பந்தமாகவும் அங்கே தொல்லியல் திணைக்களத்தின், ஆலோசனையோ அல்லது அனுசரணையோடு பௌத்த மதம் அங்கே வியாபித்திருப்பதையும் நிச்சயமாக உச்சநீதிமன்றத்திலே சமர்ப்பிக்க உள்ளார்.
நாங்கள் 4 ஆம் திகதி சென்றுவிட்டு வந்த பின், 5 ஆம் திகதி இரவு சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தபிக்குகளும், இரண்டு அமைச்சர்களும் அவ் இடத்துக்கு சென்று புத்த விகாரைக்கு முன்னால் பிரித்தோதல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும், அதன் பின்னர் இரவு இரவாக வந்து வட்டுவாகலில் உள்ள கோத்தபாய கடற்படை முகாமில் இருந்துவிட்டு சென்றதாகவும், ஊடகங்களின் ஊடாக அறிய கூடியதாக இருந்தது.

நாங்கள் போய் ஒரு தடவை பார்வையிட அவர்கள் வந்து திரும்ப பார்வையிடும் நடவடிக்கையாக இது காணக்கூடியதாக இருக்கின்றது. ஏற்கனவே எங்களுடைய சமய அடையாளங்கள், இருந்த இடங்களை மறைத்து அதாவது, நாங்கள் கற்பூரம் கொளுத்தி சூலம் இருந்த இடம் அழிக்கப்படவில்லை. ஆனால் சூலம் யாவும் சிவனுடைய அடையாளங்கள் யாவும் காணாமல் ஆக்கப்பட்டிருந்தன. அப்படியான இடங்களுக்கு அப்பால் கிட்டத்தட்ட ஒரு முப்பது மீற்றர் தூரத்துக்கு அப்பால் இப்படியான ஒரு விகாரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதை நாங்கள் உச்ச நீதிமன்றத்திலே நிச்சயமாக எங்கள் சார்பாக அது தெரிவிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE