![இன்று மீண்டும் பஞ்சாப் செல்கிறார் மோடி!](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/02/ft.jpg?fit=794%2C542&ssl=1)
பஞ்சாப் சென்ற பிரதமர் மோடிக்கு ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இன்று மீண்டும் வாக்கு சேகரிப்பதற்காக மோடி அம்மாநிலத்திற்கு செல்கிறார். அதேபோல், ராகுல்காந்தி, கெஜ்ரிவாலும் இன்று பஞ்சாப்பில் தீவிர ஓட்டு சேகரிக்கின்றனர். பஞ்சாப் சட்டசபை தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பேசுகின்றனர்.
இவற்றில் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் ஜலந்தரிலும், ராகுல் காந்தியின் பேரணி ஹோஷியார்பூரிலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் நடைபயண பிரசாரம் ஹோஷியார்பூரிலும் நடைபெறவுள்ளது. முன்னதாக பிரதமர் மோடி கடந்த ஜனவரி 5ம் தேதி பஞ்சாப்பில் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றார்.
ஆனால், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதனால், பிரதமர் மோடி டெல்லி திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு பாதுகாப்பு குறைபாடுகள் தான் காரணம் எனக்கூறி, தேசிய அளவில் இவ்விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி முதன்முறையாக பஞ்சாப் செல்கிறார். அதேநேரம் கடந்த வாரம் பஞ்சாப் வாக்காளர்களிடம் காணொலி மூலம் வாக்கு சேகரித்தார். இன்றைய பொதுக் கூட்டத்தை தொடர்ந்து, வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறும் தேர்தல் பேரணிகளில் பிரதமர் உரையாற்ற உள்ளார். அவரது பேரணி பதான்கோட்டிலும், அபோகாரிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பாதுகாப்பு குறைபாடுகள் விவகாரம் பெரிதாக பேசப்பட்டதால், இன்று ஜலந்தர் பேரணிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆதம்பூர் முதல் பாப் மைதானம் வரை சப்பே-சப்பேயில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில், பஞ்சாப் போலீஸ், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் மற்றும் கமாண்டோ படைகள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், சில விவசாய அமைப்புகள் பிரதமர் மோடியின் பஞ்சாப் வருகையை எதிர்ப்பதாக அறிவித்துள்ளன. இதனால் பாதுகாப்பு அமைப்புகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.