போர் பதற்றம் நிலவி வரும் உக்ரைனில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவுறுத்தியுள்ளார். சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்றான உக்ரைன், மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது.
ஆனால், அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.இந்த நிலையில் 2நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.
உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்லையில் சுமார் 1 லட்சம் வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இந்நிலையில் என்பிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ‘அமெரிக்கர்கள் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டிய தருணம் வந்துள்ளது. நாங்கள் உலகின் மிகப்பெரிய ராணுவத்தை எதிர்கொண்டுள்ளோம்.
இது மிகவும் வித்தியாசமான சூழல். நிலைமை விரைவில் கட்டுப்பாடின்றி செல்லலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, உக்ரைனில் சுற்றுலா சென்றிருக்கும் அமெரிக்கர்களும், அங்கு பணி நிமித்தமாக இருக்கும் அமெரிக்கர்களும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி விடுங்கள்’ என்றார்.