2019 ஆம் ஆண்டு இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பொய்யான வாக்குமூலங்களை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுவிஸ் தூதரகத்தின் முன்னாள் உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சாட்சிய விசாரணையை ஆரம்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பல்லல்ல உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று குற்றப்பத்திரிகையின் ஆங்கில மொழிபெயர்ப்பொன்றை குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் திறந்த நீதிமன்றத்தில் கையளித்துள்ளனர்.
வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாவது சாட்சியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகக் கூறி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பொய்யான வாக்குமூலங்களை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் சுவிஸ் தூதரகப் பணியாளர் மீது கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை கடந்த ஆண்டு தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.