நல்லாட்சி காலத்தில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாத நிலையில் தற்போது பல அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுவித்துள்ளார். இந்நிலையில் ஏனையவர்களையும் விடுவிக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் நாம் முயற்சி எடுத்துள்ளோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத்தீவு அபிவிருத்தி குழு தலைவருமான கே. கே. மஸ்தான் தெரிவித்தார்.
அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் கொரோனா தொற்று இருந்தாலும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக கிராம சேவகர் ரீதியில் 30 இலட்சம் மற்றும் வட்டார ரீதியில் 40 இலட்சம் எனவும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு 100 கோடி என நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதில் 100 வீதம் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்காக செலவு செய்யக்கூடியதாக உள்ளது. ஏனைய வேலைத்திட்டங்களுக்கு 40 வீதமளவில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு பெரும் விமர்சனம் வந்த போதிலும் நாம் குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.
வவுனியாவில் பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் அது தொய்வு நிலையில் காணப்பட்டது. எனினும் பின்நாட்களில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கதைத்து விரைவாக எமது மாவட்ட மக்களுக்கான கல்வி வளத்தினை நான் உருவாக்கியுள்ளேன் என்பதனையிட்டு நான் பெருமையடைகின்றேன்.
இதேபோல் ஓமந்தையில் உள்ள அரச வீட்டுத்திட்டத்திற்கான காணி ஆவணங்கள் அவர்களுக்கு கிடைக்காத நிலை காணப்பட்டது. அவர்கள் வீடுகளை அமைத்து வசிக்கின்ற போதிலும் காணி ஆவணம் இல்லாத நிலையில் அமைச்சருடன் கதைத்து தற்போது அமைச்சரவை பத்திரம் போட்டு மிக விரைவில் ஆவணங்கள் வழங்கப்பட்டவுள்ளது.
இந்நிலையில் தற்போதைய சூழலில் இரண்டு வருடங்களுக்கு புதிய கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை என அரசாங்கம் கொள்கையாக கொண்டுள்ளது. எனினும் நாம் இங்குள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுடன் கதைத்து எமது பகுதியில் பாடசாலைகளில் வகுப்பறை கட்டிடம் குறைவு என்பதனால் அதனை அமைப்பற்காக மூன்று பாடசாலைகளில் 50 மில்லியன் பெறுமதியான கட்டிட வேலைகள் இடம்பெறுகின்றது. அத்துடன் அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக கல்வி வளர்ச்சிக்காக பாடசாலைகளில் பல கட்டிட பணிகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
நல்லாட்சி காலத்தில் எத்தனை அரசியல் கைதிகளை விடுவித்தார்கள். எனினும் தற்போதைய ஜனாதிபதி பொறுப்பேற்றவுடன் அரசியல் கைதிகளின் விடுதலை இடம்பெற்றுள்ளது. அது மாத்திரமின்றி அரசியல் நோக்கத்திற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விரைவாக விடுதலை செய்வதற்கான முனைப்பினை சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் ஜனாதிபதியுடன் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் பேசி தொடர் முயற்சிகளை எடுத்துள்ளோம்.
அத்துடன் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் அவ்வப்போது விளக்கம் கொடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்யலாம் என்ற முழு நம்பிக்கையில் இருக்கின்றோம்.
இந்தியாவில் இருந்து வரும் மீனவர்கள் எமது மீனவர்கள் பாதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றனர். எனவே இரண்டு நாடுகளுக்கிடையில் முரண்பாடு வராத வகையில் ஒரே மொழி பேசும் சமூகம் என்பதனை உணர்ந்து இந்தியாவில் இருந்து வரும் மீன்வர்கள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்காத வகையில் அவர்களது எல்லையில் இருந்து மீன்களை பிடிக்க வேண்டும் என்பதனை ஒரு கோரிக்கையாக வைக்கின்றேன் என தெரிவித்தார்.