மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற விவசாய மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தடைசெய்யப்பட முடியாதவை என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் நியாயமான நோக்கங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மருதங்கேணி, வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இன்று(22) நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை யாரும் தடைசெய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் அமைந்துள்ள கட்டைக்காடு எழுவரைக் குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு பிரதேச மீனவர்களுக்கு உடனடியாக அனுமதியளிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
வடமாராட்சி கிழக்கு பிரதேசத்தில் மக்களின் செயற்பாடுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் – குறிப்பாக விவசாயம் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு, பருவகால குளங்களில் கடலுணவு வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக ஆராயும் நோக்கில் இன்றைய கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி, “சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்கான பிரதேசமாக சுமார் 19,000 ஹெக்ரேயர்களும் நாகர் கோவில் பிரதேசத்தில் சரணாலயமாக மேலும் 19,000 ஹெக்ரேயர்களும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, மணற்காடு சவுக்குத் தோப்பு பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் பிரகடனப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றினால் வாழ்வாதார செயற்பாடுகள், அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் அன்றாட வாழ்விற்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக மக்களால் பிரதேச செயலகத்திடம் முறையிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, வனப் பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதேச பிரதானிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
அனைத்து தரப்பினரது கருத்துக்களையும் செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளை தெரிவித்ததுடன், இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி எந்தத் தரப்பினது நியாயமான நோக்கங்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் கொள்கை முடிவு மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.