எம்பிலிப்பிட்டிய – கந்துருகஸ்ஹார திறந்தவெளிச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், சிறைச்சாலை புலனாய்வு பிரிவின் அத்தியட்சகரின் தலைமையில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறை அதிகாரிகள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவருமாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு 10 ஆயிரம் ரூபாவை திருடிய குற்றச்சாட்டில் குறித்த நபருக்கு கடந்த வருடம் மார்ச் மாதம் 9ஆம் திகதி நீதிமன்றத்தினால் 3 வருடம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர், அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு பின்னர் எம்பிலிப்பிட்டிய சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் இமதுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.