
ஆப்கானிஸ்தானில் தலிபான் கமாண்டர், அவரது மகன் உள்பட 6 பேர் நேற்று சுட்டு கொல்லப்பட்டனர். இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல்வேறு சிக்கலில் சிக்கி தவித்து வருகிறது. கடந்தாண்டுதான் தலிபான் படையினர் மீண்டும் ஆட்சியை பிடித்தனர். பின்னர் பல மாதங்களாகவே அங்கு கடும் பஞ்சம் ஏற்பட்டது.
உலக நாடுகளும் தலிபான் அமைப்பை அங்கீகரிக்க தயங்குவதால், ஆப்கன் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கிழக்கு குனார் மாகாணத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் தலிபான் கமாண்டர், அவரது மகன் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து அங்குள்ள செய்தி நிறுவனம் கூறுகையில், நரங் மாவட்டத்தில் தலிபான் கமாண்டர், அவரது மகன் மற்றும் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட்டின் உளவுத்துறை அதிகாரிகள், இதை உறுதி செய்து. தனிப்பட்ட விரோதம் காரணமாக மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம்கூட இங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 26 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 17ம் தேதி மேற்கு ஹெராத் மாகாணத்தில் உள்ள காசிமி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தலிபான் துணை அமைப்பினர் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் டிரைவர், மற்றும் டாக்டர் கொல்லப்பட்டனர்.
கடந்த வாரம் நடந்த மற்றொரு சம்பவத்தில், மேற்கு காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சியில் தலிபான்களால் நிர்வகிக்கப்படும் சோதனை சாவடியில், ஒரு பெண், அவரது குடும்பத்தாருடன் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார். திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வரும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அவரது தந்தை கோரியுள்ளார். இப்படி தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.