தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகமும், ஹவுதிக்கு ஆதரவாக ஈரானும் செயல்படுகின்றன.
இந்நிலையில், அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் அருகே உள்ள புதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் நடத்திய டிரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீது நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தின. இதில், முன்னாள் ராணுவ அதிகாரி உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.* பலியான இந்தியர்கள் அடையாளம் தெரிந்ததுஅபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `அபுதாபி தாக்குதலில் பலியான 2 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தூதரக அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர்களின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த 6 பேரில் 2 பேர் இந்தியர்கள். சிகிச்சைக்கு பின் அவர்கள் குணமாகி விட்டனர்,’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பலியான 2 இந்தியர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தூதரகம் தெரிவிக்கவில்லை.