ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை 10.00 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
பாராளுமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி அமர்வுக்குப்பின், ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டது.
என்றாலும் கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஜனவரி 18ஆம் திகதிவரை ஒத்திவைத்திருந்தார்.
இதற்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அரசின் கொள்கைப்பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பார்.
அத்துடன் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைப்பதற்காக ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய ஆலோசனைக்கு அமைய மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் இன்று ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்துக்கு வருவதற்கு முன்னர் காலை 09.15 மணிக்கு விருந்தினர்களின் வருகை இடம்பெறவுள்ளது.