
நாட்டு மக்களின் துன்பத்தை அறிந்த மக்களால் உருவான அரசாங்கமே தற்போதைய அரசாங்கம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்னார்.
இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை பூரணப்படுத்தி அதனை பயனாளிகளுக்கு கையளிப்பதற்கான திறப்பு வழங்கும் வைபவம் இன்று (15) கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த இந்திய வீட்டுத்திட்டத்தை தற்போதைய அரசாங்கம் மலையக பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அமரர். தொண்டமான் நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை உருவாக்க பாடுபட்டவர். அதேபோல் தற்போதைய ஜீவனும் தொண்டமானும் மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகின்றார்.
மலையக தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தின் மூலமே நாட்டுக்கு அந்திய செலவாணி கிடைக்கின்றது. நாட்டில் உருவான ஒவ்வொரு அரசாங்கமும் மலையக மக்கள் தொடர்பில் பேசினார்கள். ஆனால் ஆட்சியமைத்ததுடன் உங்கள் துக்கங்களை அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை.
சுதந்திரம் பெற்று 74 வருடங்களாகியும் மலையக மக்களுக்கு உரிய காணிகள் வழங்கப்படவில்லை. அதேபோல் சுதந்திரக் கல்வியும் மலையக மாணவர்களுக்கு உரிய வகையில் கிடைக்கவில்லை. எனவே ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் மலையக சூழலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் ஊக்குவிக்க வேண்டிய கடமை உண்டு.
அதன்படி இன்றைய அரசாங்கம் சிரமங்களுக்கு மத்தியிலும் தடைப்பட்டிருந்த அபிவிருத்தியை முன்னெடுத்து செல்கின்றது. அதற்கமைய மலையக பகுதிகளில் வீதிகள் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றன. பெருந்தோட்ட பாடசாலைகள் இன்று தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. பொருளாதார ரீதியில் உலகமும் எமது நாடும் பல சவால்களை சந்தித்துள்ளது. அதன்படி ஜனாதிபதியும், பிரதமரும் தலையிட்டு பெருந்தோட்ட மக்களுக்கு கோதுமை மா சலுகையை வழங்க தீர்மானித்தனர். அதன்படி 80 ரூபாவுக்கு கோதுமைமா வழங்கப்படுகின்றது. ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமையவே இந்த விடயம் சாத்தியமாகியுள்ளது. ஆகவே நாட்டு மக்களின் துன்பத்தை அறிந்த மக்களால் உருவான அரசாங்கமே இதுவாகும். பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் பெருந்தோட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்றார்.