சம்பளத்தை எதிர்ப்பார்த்து அல்ல நாடு தொடர்பில் சிந்தித்துதான் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்றதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர், தான் இன்னும் உயர் மட்ட சம்பளத்தை பெறவில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்,
நான் கிட்டத்தட்ட 9 வருடங்கள் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்துள்ளேன். நான் 40 வருட அனுபவமுள்ள பட்டயக் கணக்காளர். நான் மத்திய வங்கியில் மாதம் 70,000 ரூபாய்க்கு வேலை செய்தேன். ஒரு பாஸ் அவுட் ஆன கணக்காளர் கூட இந்த தொகைக்கு வேலை செய்யமாட்டார் என்று நினைக்கிறேன்.
7 வருடங்கள் அந்த சம்பளத்திற்கு வேலை செய்தேன். பின்னர்தான் எனது நியமனக் கடிதத்தில் ஓய்வூதியம் இருப்பதைப் பார்த்தேன்.
நான்கு வருடங்கள் கழித்து அப்போதைய ஆளுநரிடம் இப்படி ஒரு கடிதம் இருக்கிறதா, அதற்கு பணம் தருவீர்களா என்று கேட்டேன். இது குறித்து ஆராய்ந்து அறிவிப்போம் என அவர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு, இது பணம் செலுத்தத் தகுதியற்றது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. பணம் செலுத்த முடியாது என கூறியிருந்தார். அந்த விடயத்தை அங்கேயே விட்டுவிட்டேன். அதற்கு மேல் நான் பேசியதில்லை.
அதற்கு நான் கடிதம் கூட எழுதவில்லை. அரசியல் பழிவாங்கல் பிரிவினரிடம் கூட சொல்லவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு எனக்கு அறிவிக்கப்பட்டது. எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று.
செலுத்த உள்ளதை செலுத்துங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று நான் கூறினேன். ஆனால் நான் மீண்டும் கோரிக்கை வைக்க மாட்டேன் என்றார்.