இரண்டு வாரங்களுக்குள் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காவிடின், அறிவிக்கப்படாத தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) எழுதியுள்ள கடிதத்தில் எச்சரித்துள்ளது.
வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கு 18,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என, இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பி.ஏ.பி பஸ்நாயக்க ( P.A.P. Pasnayake) கையொப்பமிட்ட கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
நவம்பர் 12ஆம் திகதி, நிதியமைச்சர் பசில் ராஜபக்சவால் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக, நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் தனியார் துறையினருக்கு 10,000 ரூபா சம்பள உயர்வைக் கோரினர்.
ஆனால், 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முழு அரச சேவையையும் மறந்து அரச ஊழியர்களையும் பொதுமக்களையும் எண்ணெய் சட்டியில் தள்ளியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்க சம்மேளனம், பொருட்களின் விலை உயர்வுக்கு முன்னராக வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும்போது பெறப்படும் ஊதியம் திருப்திகரமாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.”அரச சேவை மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அமைய, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒன்றுக்கு மாதத்திற்கு சராசரியாக 58,000 ரூபாய் செலவாகிறது.”
இந்த அனைத்துக் காரணிகளையும் தோற்கடித்து மீண்டும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அரசாங்கம் அதிகரித்துள்ளதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பி.ஏ.பி.பஸ்நாயக்க அரச தலைவருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவுகள் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மாதம் ஒரு முறை சம்பளம் பெறும் அரச ஊழியர்கள் வரவு – செலவுத் திட்டத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் 18,000 ரூபாய் சம்பள உயர்வைக் கோருகின்றனர்.
”இலங்கையின் அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு என்ற வகையில், குறைந்த பட்ச சம்பளம் அல்லது கொடுப்பனவான ரூபாய் 18,000 என்பது முழு அரச சேவைக்கும் பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இல்லாவிட்டால், எதிர்காலத்தில் ஒட்டுமொத்த அரச சேவையும் இப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” என குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டப் பிரேரணையை சமர்ப்பித்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, நாடு தாங்கிக்கொள்ள முடியாத அளவு அரச சேவையை விரிவுபடுத்தியுள்ளதால், அரச சேவைக்கு மேலும் “லொசஞ்ஜர்“ (சலுகை அல்லது சம்பள உயர்வு) வழங்க முடியாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.