வீதி போக்குவரத்து விதியை மீறியதாக, 17 வயது சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம், பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக, நான்கு நாட்களாக இரவு நேர போராட்டம் தொடர்வதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிஸ் அடுத்துள்ள புறநகரான நான்தெரே பகுதியில், கடந்த, 27ம் திகதி, போக்குவரத்து விதியை மீறியதாக சில இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதில், 17 வயதான நாஹெல் என்ற வேன் டிரைவராக பணியாற்றும் சிறுவனை, போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
போலீசாரின் அத்துமீறல் தொடர்பாக ஏற்கனவே பல பிரச்னைகள் இருந்த நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு, அப்பகுதி இளைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைஅடுத்து அப்பகுதி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, முஸ்லிம் போல் உள்ளதால் அந்த சிறுவன் கொல்லப்பட்டதாக செய்திகள் பரவின. இதையடுத்து, பிரான்சின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.
தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று முன்தினம் இரவும், பாரிஸ், மார்ஷெலே, லியான் உட்பட பல பகுதிகளில், இரவு போராட்டம் நடந்தது.
பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களும் நடந்தன. பஸ்கள், வாகனங்கள் உள்ளிட்டவை தீ வைக்கப்பட்டன. கடைகள் நொறுக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன.
இதனால், பெரும்பாலான நகரங்களில் அலுவலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவு மட்டும், 1,100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தச் சிறுவனின் உடலடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், நேற்று காலையும் பெரும்பாலான நகரங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையே, போராட்டங்களை கைவிட்டு, அமைதி பாதைக்கு திரும்பும்படி, அதிபர் இமானுவேல் மேக்ரோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபல விளையாட்டு வீரர்களும், அமைதி காக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு வேண்டுகோள் விடுத்து செய்தி வெளியிட்டு உள்ளனர்.
நாடு முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
”சமூக வலைதளங்களில், போராட்டம் தொடர்பாக தொடர்ந்து பொய் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இதுவே, வன்முறை தொடர்வதற்கு முக்கிய காரணம்,” என, அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
”நாங்கள் போலீசுக்கு எதிராக போராடவில்லை. குறிப்பிட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவே வலியுறுத்துகிறோம். என்னுடைய மகன், முஸ்லிம்கள் போல் உருவம் உடையதால் கொல்லப்பட்டுள்ளான்,” என, சுட்டுக் கொல்லப்பட்ட, இளைஞரின் தாய் மவ்னியா குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் போலீஸ் மீது, இனவெறி குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.