“எதிர்காலத்தோடு விளையாடாதீர்கள்” : அநுர – சஜித்திற்கு ஜனாதிபதி அழைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களுடன் மக்கள் விடுதலை முன்ன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடல் ஒன்றை வழங்கத் தயார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்களுக்கிடையிலான சந்திப்பில், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரின் நல்ல முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. ஒரு வருடமாக நாம் மிகவும் கஷ்டத்தில் இருந்தோம். நாட்டின் பொருளாதாரம் சரிவடைகின்றது என்பது உண்மையிலேயே மிகப் பெரியதொரு அழிவு. எரிபொருள் இருக்கவில்லை, மின்சாரம் இருக்கவில்லை, மருந்துகள் இருக்கவில்லை, நாம் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்க்கையினை கொண்டு சென்றோம். பொருளாதாரம் முற்றாக முடங்கியது. அந்த முடங்கல் நிலையில் இருந்து நாம் சற்று முன்னேறியுள்ளோம். உரங்கள் வழங்கப்பட்டுள்ளன, எரிபொருள் இப்போது உள்ளது, மின்சாரம் உள்ளது. கடந்த காலத்தினை விடவும் கொஞ்சம் நாம் இலேசாக வாழக்கூடியதாக உள்ளது. எனினும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றது. வட்டி வீதங்களில் அதிகரிப்பு, பணவீக்கம், வியாபாரங்களை முன்னெடுத்துச் செல்வதில் சிரமம், அந்த நிலையில் நாம் இருக்கின்றோம். நாம் அடிப்படை பிரச்சினைகளையே தீர்த்துள்ளோம். ஏனைய பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டியுள்ளது.

ஒரு நாடு வங்குரோத்து நிலையில் இருப்பின் கடன்களை மீளச் செலுத்த முடியாதபோது சர்வதேச நாணய நிதியம் மட்டும் தான் அதற்கு உதவி செய்யும். உலகில் வேறு எந்தவொரு அமைப்பும் இல்லை. அப்படி அமைப்புக்கள் இருந்தால் கூறுங்கள், நாம் விரிவாக அது தொடர்பில் கலந்துரையாடுவோம்.

கிரீஸ் நாட்டுக்கு 13 வருடங்கள் சென்றன. நான் ஜனாதிபதி பதவியினை ஏற்கும் போது 13 வருடங்கள் பதவியில் இருக்க எதிர்பார்க்கவில்லை. நான் நினைக்கிறேன் இலங்கை வாழ் மக்களுக்கு அதை விடவும் பலம் உண்டு. இருக்கும் நிலையில் இருந்து சீக்கிரமே எழுந்து வருவதற்கு.. குழியில் இருந்து மேலே வர முடியாது என்றால் குழியினுள்ளே சிக்கி இருக்க வேண்டியது தான்.. குழியில் இருந்து வெளியே வர வேண்டும் என எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்கு ஒரே வழிதான் உள்ளது. ஒரே ஒரு ஏணி தான் உண்டு. அந்த ஏணி தான் சர்வதேச நாணய நிதியம். ஏனைய கட்சிகளும் அதற்கு செவிசாய்த்துத் தான் ஆக வேண்டும். வேறு ஏதாவது ஏணிகள் இருந்தால் தயவு செய்து கூறுங்கள். அது குறித்து ஆராய்வோம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரம்பித்தேன். செப்டம்பர் மாதம் கையெழுத்திட்டோம். எமக்கு 15 காரணிகள் முன்மொழியப்பட்டிருந்தன. அந்த 15 காரணங்களையும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்தத் கோரினர். எம்மால் முடியவில்லை. பின்னர் ஜனவரி 31 வரை நீடித்தோம். மீள நாம் கோரிய போது பெப்ரவரி 15ம் திகதிக்கு நீடித்தது. ஒரே ஒரு காரணத்தினை எங்களால் செய்ய முடியாது போனது. மின்சார சபையின் நட்டமானது 230 பில்லியன்களாகும். எமது புதிய ஒப்பந்தத்தின்படி நாட்டின் வருவாயை மின்சார சபைக்கு வழங்க முடியாது. மக்களின் பணத்தினை மக்களுக்கே வழங்க வேண்டும் என்றனர். ஆதலால் மின்சார சபைக்கு மின்சாரக் கட்டணத்தினை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டது. இப்போது எங்களது எல்லா வேலைகளும் பூர்த்தியாகிவிட்டது. இதிலிருந்து முன்னோக்கிச் செல்ல வேண்டியது சர்வதேச நாணய நிதியம் தான். சீனா இன்னும் தாமத நிலையில் உள்ளது. நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பின்வாங்கினால், உரம் இல்லாது போகும், எரிபொருள் இல்லாது போகும், மின்சாரத்தினை 12 மணித்தியால துண்டிக்க வேண்டி வரும். நாம் IMF இடம் கூறுவது எங்களது வேலைகள் முடிந்தன, உங்கள் வேலைகளை முடியுங்கள். வேறு வழியில்லை. பொருளாதார வீழ்ச்சி என்பது பாரிய அழிவு என்பதை நினைவில் வைத்திருங்கள்.

உள்ளூராட்சி தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. இப்போதுள்ள பொருளாதார நிலையில் முடியாது. கொஞ்சம் தள்ளிப் போடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லையே. பொருளாதாரம் சற்றேனும் தளைக்கட்டும். தேர்தல் குறித்து நீதிமன்றுக்கு செல்கிறார்கள். அது சரி, நீதிமன்றில் ஏதாவது ஒரு தீர்ப்பு வழங்கித்தான் ஆகணும். ஆனால் பொருளாதாரம் குறித்து நீதிமன்றினால் கூட ஒன்றும் செய்ய முடியாது. அதற்கான பொறுப்பு நாடாளுமன்றுக்கு மட்டுமே உண்டு. சும்மா வாய் இருக்குறதுக்கு விளையாட்டு அரசியல் வேண்டாம். இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம். தமது திட்டம் தான் என்ன என்பதனை வெளியிடுங்கள். அவர்களது திட்டத்தினை பரிசீலிக்க நான் எப்போதும் தயாராக உள்ளேன். தேசிய மக்கள் சக்தியின் யோசனைகளை முன்வையுங்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டங்களை கையளியுங்கள். அவை சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அதை விட வேறு வழிகள் உள்ளதா என பார்ப்போம். நாட்டினை தாங்குவதற்கு யாரும் முன்வராத நிலையில் நான் ஜனாதிபதி பதவியினை ஏற்றேன். இப்போது ஏச்சு வாங்குகிறேன். தெரிந்து தான் வந்தேன். இந்த நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். வரும் 13-15 வருடங்களில் நாம் அதனை செய்வோம். அப்போது நாம் யாரும் இருக்க மாட்டோம். என்றாலும் அந்த வழிகளில் பின்னால் வருவோர் பயணிக்கலாம். அடுத்த தலைமுறைக்கு சிறந்ததொடு எதிர்காலத்தினை வழங்குவோம்..” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE